
நான் காலையில் என் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு பள்ளிச் சிறுவன் கைக்காட்டினான். சில நொடிகளுக்குப் பின்னர் தான் நான் அதனை உணர்ந்தேன். அதற்குள் நான் ஒரு 10அடி தூரம் தள்ளி வந்துவிட்டேன். திரும்பி சென்று அந்த சிறுவனை கூட்டி வரலாமென்றுப் பார்த்தேன். ஆனால் என் கைக்கடிகாரத்தை பார்த்தேன் மணி 9:20. அலுவலகத்திற்கு தாமதம் ஆகிவிடும், சரி வேண்டாமென்று வந்துவிட்டேன்.
அலுவலகம் வந்த பிறகும் அந்த சிறுவனின் முகம் எனக்கு மறக்கவேயில்லை. அவன் முகத்தில் ஒரு சோகம் இருந்தது. பள்ளிக்கு தாமதம் ஆகிவிட்டதென்று சோகமா? தாமதமாக சென்றால் ஆசிரியர் திட்டுவாரென்ற பயமா? தந்தையோ தாயோ பள்ளி வரை தன்னை விட்டுச் செல்ல இன்று வரவில்லையே என்ற கோபமா? பேருந்தை விட்டுவிட்டோமே என்ற எரிச்சலா?
தெரியவில்லை!!
ஆனால் ஏதோ தவறு செய்து விட்டோமென்ற உறுத்தல் அன்று முழுவதும் இருந்துக் கொண்டேயிருந்தது!